திருச்செங்கோடு அருகே கோர விபத்து: கல்லூரி பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பலி!

 
பேருந்து விபத்து

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் அருகே தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிவேதா (17), தனுஸ்ரீ (13), அபிநயா (12) ஆகிய மூவரையும், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த சுபிதா என்ற கலைச்செல்வி (19) இருசக்கர வாகனத்தில் தினசரி அழைத்து வந்துள்ளார். வழக்கம் போல் பள்ளியிலிருந்து மாணவிகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பியபோது, ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் உள்ள சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சாலையைக் கடக்க முயன்றனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் கலைச்செல்வி மற்றும் அபிநயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிவேதா மற்றும் தனுஸ்ரீ ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எலச்சிபாளையம் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கல்லூரி பேருந்து ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் சக்கராம்பாளையம் கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.