வயநாடு அரசு பொறியியல் கல்லூரியில் 'ஷிகெல்லா' பாதிப்பு - 4 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை!
கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு 'ஷிகெல்லா' நோய் தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உடனே அந்த மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் அவருக்கு 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதே கல்லூரியில் படித்து வெளியே தங்கி வரும் மேலும் 3 மாணவர்களுக்கும் இந்நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றும் அறிகுறிகள் கொண்ட 4 மாணவர்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி விடுதி மற்றும் மாணவர்களின் இருப்பிடங்களில் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும், நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளைத் முடுக்கிவிட்டுள்ளனர்.
ஷிகெல்லா என்பது மனிதர்களின் குடல் பகுதியைத் தாக்கும் ஒருவகை பாக்டீரியா தொற்றாகும். சுகாதாரமற்ற நீர், தூய்மையற்ற உணவு மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பின் மூலமாக இந்நோய் எளிதில் பரவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும்.
