திருமண வீட்டார் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து - 4 இளைஞர்கள் உடல்நசுங்கி பலி; 8 பேர் படுகாயம்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே தேவ்குராடியா பகுதியில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஆஷ்டா பகுதியில் நடந்த திருமண விழாவை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஆஷ்டா பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவருக்கும், இந்தூரின் பட்வாலி சௌகி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் 3 முதல் 4 வாகனங்களில் பட்வாலி சௌகி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தீவன மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றுள்ளது. குடெல் பகுதி அருகே உள்ள பள்ளம் போன்ற இடத்தில், லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் லாரிக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த பட்வாலி சௌகி பகுதியைச் சேர்ந்த ஃபர்ஹான் (19), ஆரிஸ் (20), இர்பான் (24), அர்ஃபத் (23) ஆகிய 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் காரில் இருந்த ஆசிப், முகமது அலி, அயன், சோனு, முகமது கைஃப், ரெஹான் மற்றும் அல்ஃபெஸ் ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.
விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தப்பியோடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டுப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

தப்பியோடிய லாரி ஓட்டுநரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தில், ஒரே நேரத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
