40 சொகுசு வீடுகள்.. மாதந்தோறும் வாடகை வருவாய் மட்டுமே ரூ.1.8 கோடி... ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதியரிடம் தீவிர விசாரணை!

 
ஐஏஎஸ் ஐபிஎஸ் லஞ்சம் தம்பதி

ராஜஸ்தான் மாநிலத்தில் 40 சொகுசு வீடுகளை வாங்கி, அதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வாடகை வருவாய் ஈட்டியதாக மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதியினர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் (56) மற்றும் அவரது மனைவியான மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் (57) ஆகிய இருவரும் மாநிலத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவர்கள். இவர்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2026 மார்ச் வரையிலான காலத்தில் உதய்பூர் மற்றும் ஆழ்வார் போன்ற முக்கியச் சுற்றுலாப் பகுதிகளில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் 40 சொகுசு வில்லாக்களை வாங்கியுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

'கோயல் ஃபேஷன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து இந்த 40 வீடுகளையும் வாங்கி, மீண்டும் அதே நிறுவனத்திற்கே குத்தகைக்கு விட்டுள்ளனர். இதற்காக அந்த நிறுவனம் மூலம் மாதம் தோறும் ரூ.1.8 கோடி வாடகை வருவாயாக இத்தம்பதிக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.

பத்திரப் பதிவில் வீடுகளின் மதிப்பு ரூ.6.16 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சந்தை மதிப்பு பல மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. வீடுகளை விற்ற அதே தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாகப் பல்வேறு நிலங்களின் வகைப்பாட்டை மாற்றி அமைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லஞ்சம்

கடந்த ஜனவரி மாதம் ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியலில் தன் பெயரில் 14 சொத்துகள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் தன் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

40 சொகுசு வீடுகளும் கணவன், மனைவி மற்றும் இரு மகன்களின் பெயர்களில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சுற்றுலா மையங்களை மையமாகக் கொண்டு பல கோடிகளில் சொத்து சேர்த்த இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.