டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,098 காலிப்பணியிடங்கள் - ஆக.14 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் ரயில்வேயில் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள மொத்தம் 4,098 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இளநிலை பொறியாளர், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மற்றும் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டண்ட் போன்ற பிரிவுகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் வொர்க்ஷாப், டிராக் மெஷின், டீசல் மெக்கானிக்கல், வெல்டர், சிவில், மெக்கானிக்கல், டீசல் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் பணியின் தன்மைக்கேற்ப, துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி பட்டம் முடித்திருக்க வேண்டும்.
01-01-2027 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின்படி மாதம் ரூ. 35,400 ஆரம்பச் சம்பளமாக வழங்கப்படும்.

முதல்கட்ட கணினி வழித் தேர்வு, இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை முறைகளில் தேர்வு செய்யப்படும்.
பொது & ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 (முதல் கட்டக் கணினித் தேர்வில் பங்கேற்ற பிறகு ரூ.400 திரும்பப் பெறப்படும்). எஸ்சி / எஸ்டி / பெண்கள் / எக்ஸ்-சர்வீஸ்மேன் / EBC பிரிவினர்களுக்கு ரூ.250 (முதல் கட்டத் தேர்வில் பங்கேற்ற பிறகு முழுத் தொகையும் கணக்கில் திருப்பியளிக்கப்படும்).
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 14
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 13
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbchennai.gov.in மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பறிக்கும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என இந்தியன் ரயில்வே அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
