4.11 கோடி பாடநூல்கள் தயார்.. பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம்!
தமிழகத்தில் ஒருபுறம் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் வரும் கல்வி ஆண்டிற்கான (2026-27) முன்னேற்பாடுகளைத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது பாடநூல்கள் விநியோகிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்காக மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்: 2.71 கோடி புத்தகங்கள் (இலவசமாக வழங்கப்படுபவை). தனியார் பள்ளி விற்பனைக்காக: 1.40 கோடி புத்தகங்கள்.
எனப் பிரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன.
1, 2 மற்றும் 3-ம் வகுப்புத் தவிர, இதர அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அந்தந்த வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்குப் புத்தகங்களை அனுப்பும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் பணிகள் மற்றும் கோடை வெயிலுக்கு மத்தியிலும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இந்தப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது, எவ்விதத் தாமதமும் இன்றி மாணவர்கள் தங்களது புதிய பாடப்புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கான புத்தகங்களும் விரைவில் தயாராகி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
