4,200 கோழிக்குஞ்சுகள் கருகி சாம்பல்... விழுப்புரத்தில் கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து!
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே நடைபெற்ற கோழிப்பண்ணை தீ விபத்தில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் சாலையில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நள்ளிரவில் திடீரென இப்பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 4,200 கோழிக்குஞ்சுகளும் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தன.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த வானூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
