மதுரையில் 45 ஆண்டுகள் பழமையான 'பெரியார் ஆர்ச்' நள்ளிரவில் இடித்து அகற்றம்!
மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 45 ஆண்டுகள் பழமையான தந்தை பெரியார் தோரண நுழைவாயில் (Periyar Arch), நீதிமன்ற உத்தரவின்படி நேற்று நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. மாநகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்திருந்த இந்த நுழைவாயில் அகற்றப்பட்ட சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த நுழைவாயிலால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நுழைவாயிலை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, நேற்று நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி (JCB) இயந்திரங்கள் மூலம் இந்த ஆர்ச்சை முழுமையாக இடித்து அகற்றினர்.
மதுரையில் போக்குவரத்துச் சீரமைப்பு மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகப் பழமையான நுழைவாயில்கள் அகற்றப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த புகழ்பெற்ற 'நக்கீரர் ஆர்ச்' இதேபோல் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது நகரின் மற்றொரு அடையாளமாகத் திகழ்ந்த பெரியார் நுழைவாயிலும் அகற்றப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
