தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான போட்டி தீவிரம்: 46 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்!
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், சேர்க்கைக்கான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவக் கல்வி இயக்ககம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, திட்டமிட்டபடி நேற்றுடன் நிறைவு பெற்றது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது.

தமிழ்நாட்டில் இருந்து சுமார் 46,000 மாணவ-மாணவிகள் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டில் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 46,000 பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளன:
மாணவர்கள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தரவரிசைப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குவதற்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
