47.8 அடி உயரத்தில் பிரமாண்ட நவராத்திரி கொலு - சென்னையில் உலக சாதனை முயற்சி!
சென்னையில் நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பெரம்பூர் எஸ்.பி.ஆர். சிட்டி வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக 47.8 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த 'வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அமைப்புடன் இணைந்து, கொலு அமைப்பின் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2012-ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்ட 36.4 அடி உயரக் கொலு சாதனையை இது முறியடிக்கிறது.

எஸ்.பி.ஆர். சிட்டி வளாகத்தில் உள்ள 47 தளங்களைக் கொண்ட 'டவர் எச்' குடியிருப்பு கட்டிடத்தின் உயரத்தால் ஈர்க்கப்பட்டு, அதே எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில் இந்த 47.8 அடி உயரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கொண்டாட்டத்தில், 4,500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி பூஜைகள், கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த நிகழ்வில் பொது மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் எனவும், அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
