சோகம்... தூண் இடிந்து விழுந்து 4ம் வகுப்பு மாணவன் பலி!

 
சிறுவன்

 

கர்நாடக மாநிலம் சிக்நாயகனஹள்ளி தாலுகா பெலகிஹள்ளி கிராமத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தின் சிமெண்ட் தூண் இடிந்து விழுந்ததில் 10 வயது பள்ளி மாணவன் தனுஷ் உயிரிழந்தார். பெலகிஹள்ளி அரசு உயர் தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த தனுஷ், சக மாணவர்களுடன் கட்டிடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. எதிர்பாராதவிதமாக அந்தத் தூண் இடிந்து விழுந்ததில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டிடத்தின் முன்பகுதியில் ஏற்கனவே மூன்று தூண்கள் இருந்த நிலையில், வாஸ்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் கூடுதலாக இந்தத் தூண் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முறையான அடித்தளமோ, தேவையான இரும்புக் கம்பிகளோ இல்லாமல் அந்தத் தூண் கட்டப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் தூண் விழுந்ததில் அருகில் நின்ற மற்ற இரண்டு குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு உடனடியாகத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிக்நாயகனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமானக் கோளாறு மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.