திருச்செந்தூர் திருக்கோயிலில் 4ம் கால வேள்வி பூஜை... அமைச்சர்கள் பங்கேற்பு!

 
சேகர் பாபு


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நான்காம் கால வேள்விச்சாலை பூஜையில் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்

திருச்செந்தூர் முருகன்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், இவ்விழாவிற்கான வேள்விச்சாலை பூஜைகள் 01.07.2025 அன்று முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து வேள்விச்சாலை பூஜை நடைபெற்று வருகிறது. இன்றையதினம் நடைபெற்ற நான்காம் கால வேள்விச்சாலை பூஜையில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் தலைமையில் கலந்துக்கொண்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருக்கோவில் வளாகத்தில் இணை ஆணையர் அலுவலகம், கூட்டரங்கம், பாதுகாப்பு அறை, உண்டியல் எண்ணும் வளாகம், முதலுதவி மையம், சஷ்டி மண்டபம், சிசிடிவி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, சர்வர் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு யூபிஎஸ் அறை (Server and UPS Room), மின்தூக்கி வசதியுடன் ரூ.24.80 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், 04 சொகுசு அறைகள் (Suit Room), 24 குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், 24 சாதாரண அறைகள் என ரூ. 10.57 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 52 அறைகள் உள்ள தங்கும் விடுதி கட்டிடம் என மொத்தம் ரூ.35.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர், நாளையதினம் பயன்பாட்டிற்கு திறக்கவுள்ள நிலையில், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.