இட்லி தட்டில் விரல் சிக்கி 4 வயது சிறுவன் தவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த அலுமினிய இட்லி தட்டின் துளையில் அச்சிறுவனின் இடது கை ஆள்காட்டி விரல் பலமாகச் சிக்கிக் கொண்டது. விரலை வெளியே எடுக்க முயன்றபோது வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அலறித் துடித்தான்.

பெற்றோர்கள் எவ்வளவோ முயன்றும் சிறுவனின் விரலை இட்லி தட்டிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன அவர்கள் இட்லி தட்டுடன் சிறுவனை பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு சிறுவனுக்கு எவ்வித காயமும் ஏற்படாதவாறு துரித நடவடிக்கையில் இறங்கினர்.
அவர்கள் இரும்பு வெட்டும் சிறிய நவீன கருவியைப் பயன்படுத்தி மிகவும் எச்சரிக்கையுடன் இட்லி தட்டின் துளையை லாவகமாக வெட்டி எடுத்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு சிறுவனின் விரல் பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த சாதுரியமான மற்றும் துரிதமான மீட்புப் பணியைப் பாராட்டி சிறுவனின் பெற்றோர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
