அரசு மருத்துவமனையில் பயங்கரம்: லிப்டில் சிக்கி 4 வயது சிறுவனின் தந்தை பலி!

 
லிப்ட லிப்ட

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பழுதடைந்த லிப்டில் சிக்கி 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் முறையான பராமரிப்பு இல்லாததால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா டம்டம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர். இவர் தனது 4 வயது மகனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்வதற்காக லிப்டைப் பயன்படுத்தியபோது, அது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதியிலேயே நின்றுவிட்டது. நீண்ட நேரம் அவர்கள் லிப்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

ஆர்.ஜி.கர்

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது அந்த நபரின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தபடி மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். விபத்து நடந்த சமயத்தில் அந்த லிப்டில் ஆபரேட்டர் யாரும் இல்லை என்றும், அவசர உதவிக்கான பட்டன்களும் வேலை செய்யவில்லை என்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

கர்

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், லிப்ட் பராமரிப்புப் பணியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த அலட்சியம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.