பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி.. மருத்துவமனை அடித்து நொறுக்கல் - நள்ளிரவைக் கடந்தும் நீடித்த சாலை மறியல்!

 
சிறுமி புளியங்குடி பள்ளி சிறுமி புளியங்குடி பள்ளி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் கார் பின்புறமாக மோதியதில் எல்கேஜி பயிலும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் நள்ளிரவிலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நெற்கட்டும் செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி - வேல்மயில் தம்பதியினரின் ஒரே மகள் சிவ யாழினி (4). இவர் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்தார். நேற்று மாலை சுமார் 4 மணி அளவில், சிறுமி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த வளாகத்திற்குள் இருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பின்புறமாக வந்த போது, சிறுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து

சிறுமி உயிரிழந்த தகவலைப் பள்ளி நிர்வாகம் உடனடியாகப் பெற்றோருக்குத் தெரிவிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு அருகிலேயே அதே நிர்வாகத்திற்குச் சொந்தமான தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் ஆத்திரத்தில் அந்த மருத்துவமனையின் முகப்புக் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

சிறுமி புளியங்குடி பள்ளி

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மகளைப் பறிகொடுத்த பெற்றோரின் கதறல் அந்தப் பகுதியையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் கார் இயக்கப்பட்ட விதம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.