4 வயது இந்திய சிறுமி செஸ் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை!
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.
எலெனா சர்மாவுக்கு தற்போது 4 வயது, 6 மாதம் மற்றும் 16 நாட்கள் ஆகிறது. இவர் சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசைத் தொடரில் பங்கேற்று 1,432 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் ‘பிடே’ தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மிக இளம் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக மிக இளம் வயதில் ‘பிடே’ தரவரிசையில் இடம்பெற்றவர் என்ற சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா என்பவரின் வசமுள்ளது. அவர் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது 3 வயது, 7 மாதம் மற்றும் 20 நாட்களில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
4 வயதிலேயே சர்வதேச செஸ் தரவரிசையில் இடம்பிடித்துள்ள எலெனா சர்மாவின் இந்த அபார சாதனை செஸ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
