ரயில் நிலையத்தில் பச்சையப்பன், நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: 5 பேர் கைது!

 
ரயில்

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் கல்வீச்சுச் சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் ரயில் சேவைகளில் வழித்தடப் பிரச்சனை காரணமாகப் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த எதிர்பாராத கல்வீச்சுச் சம்பவத்தின் போது, அங்கு ரயிலுக்காகக் காத்திருந்த மற்றொரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த அப்பாவி மாணவர் ஒருவர் மீது கல் பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.

கத்திக்குத்து தகராறு

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்வீச்சு மற்றும் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், மோதலில் தொடர்புடைய 5 மாணவர்களை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய வன்முறைச் செயல்களைத் தடுக்க முக்கிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.