டெல்லியில் 5 மெட்ரோ நிலையங்கள் மூடல் - பாதுகாப்பு தீவிரம்; 144 தடை உத்தரவு!

 
டெல்லி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பேரணி அறிவிப்பால் புதுடெல்லி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தலைநகரின் முக்கிய இடங்கள் பூட்டப்பட்டு, விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் பாதுகாப்புக் காரணங்களுக்காக 5 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. புதுடெல்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

முன்னனுமதி பெற்ற ஜந்தர் மந்தர் பகுதியைத் தவிர, மற்ற இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குப் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டக் குழுவினரின் நாடாளுமன்றப் பேரணிக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.

போலீசாரின் தடையையும் மீறிப் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றதால் களத்தில் பதற்றம் அதிகரித்தது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்களை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, தடியடி நடத்தி நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் செல்லக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிற்கதவுகளும் பூட்டப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.