#BREAKING: தமிழகத்தில் 5 முனை போட்டி.. சசிகலா - ராமதாஸ் புதிய கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, தற்போது சசிகலா மற்றும் மருத்துவர் ராமதாஸ்கைகோர்த்திருப்பது தேர்தல் களத்தை ஐந்து முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
சசிகலா தனது புதிய கட்சிக்கு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எனப் பெயரிட்டுள்ளார். இக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் 'தென்னந்தோப்பு' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில், 'மாம்பழம்' சின்னம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையே மோதல் நீடிக்கிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்க மறுத்தாலும், தற்காலிகமாக மருத்துவர் ராமதாஸ் தரப்புக்குச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் இக்கூட்டணி புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாகப் பிரதான 5 அணிகள் மோதுகின்றன. திமுக கூட்டணி: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (SPA), அதிமுக - பாஜக கூட்டணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), நடிகர் விஜய் தலைமையிலான அணி தமிழக வெற்றிக் கழகம் (TVK), சீமான் தலைமையிலான தனிப்படை நாம் தமிழர் கட்சி (NTK) இவற்றுடன் இப்போது ராமதாஸ் - சசிகலா கூட்டணியும் மோதுகின்றது.
இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பிற்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "தமிழகத்தின் சுயமரியாதை, தன்னாட்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த 'மக்கள் நலக் கூட்டணி' உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் துரோக அடையாளங்களை வேரறுப்பதே எங்களின் முதன்மை இலக்கு" என இருவரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் வருகை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்றும், ராமதாஸின் ஆதரவு வட மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மற்ற பிரதான கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
