பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் ஒரே நேரத்தில் உருவான 5 புயல்கள் - 3 நாடுகளுக்குப் பெரும் ஆபத்து!

 
பசிபிக் அட்லாண்டிக் கடல் புயல்

எல் நினோ மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாகப் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.

உலகையே அச்சுறுத்தும் வகையில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் போலோ, சரிகே, நோலோ, ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகிய 5 புயல்கள் ஒரே நேரத்தில் சுழன்றடித்து வருகின்றன. இதில் போலோ, சரிகே மற்றும் நோலோ ஆகிய 3 புயல்களும் அசுர வேகம் எடுத்து 'அதிதீவிர புயல்களாக' மாறியுள்ளன. ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகிய இரண்டும் நடுத்தர புயல்களாக வலுப்பெற்றுள்ளன. மேலும் கடலில் 3 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் உருவாகி வருகின்றன.

சீனா புயல் வெள்ளம் ஜப்பான்

மெக்சிகோ கடற்கரையை ஒட்டி போலோ புயல் உருவாகி கரையை நோக்கிச் சீறிப் பாய்ந்து வருகிறது.  பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியிலிருந்து ஹவாய் தீவுகளை நோக்கி நோலோ புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு பசிபிக் பகுதியில் சரிகே புயல் உருவாகி தைவானை நோக்கி நகர்ந்து அசுர பலம் பெற்று வருகிறது.

இந்த அதிதீவிர புயல்களின் கோரத் தாண்டவத்தால் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஓகினாவா உள்ளிட்ட நாடுகள் மற்றும் தீவுப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு வானிலை மையங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இங்கிலாந்து புயல் மழை

இதற்கு முன்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரே நேரத்தில் 3 அதிதீவிர புயல்கள் உருவானது குறிப்பிடத்தக்கது. தற்போது கடல் நீர் அதிகளவில் வெப்பமடைந்து வருவதால் புயல்கள் வேகமாக வலுப்பெறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.