யூடியூபர் மதுமிதா காண்டிராக்டரிடம் 5 சவரன் நகை மோசடி வழக்கு.. இன்று விசாரணை!

 
மதுமிதா

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாகப் புகாரில் சிக்கியுள்ள பிரபல பெண் யூடியூபர் மதுமிதா மீதான வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் மதுமிதா (28), சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் அறியப்பட்டவர். இவரது வீட்டில் கடந்த மாதம் நடந்த நகைக்கொள்ளை தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து என்பவர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜீரோ எஃப்.ஐ.ஆர். முறையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தற்போது பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுமிதா

கடந்த 2022-ம் ஆண்டு தனக்கு அறிமுகமான யூடியூபர் மதுமிதா, நைசாக ஏமாற்றித் தன்னிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டதாகப் புகார்தாரர் பேச்சிமுத்து குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பா.சாஸ்திரி கூறுகையில், "இந்தச் சம்பவம் 2022-ல் நடைபெற்றது. வழக்கு தற்போது தான் பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் புகார்தாரரான காண்டிராக்டர் பேச்சிமுத்துவிடம் இன்று (சனிக்கிழமை) தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.