உஷார் ... 50 மருந்துகள் தரமற்றவை... மத்திய அரசு அதிர்ச்சி தகவல் !
இந்தியா முழுவதும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் மாத்திரைகளின் தரம் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மருந்துகளின் தரத்தை பரிசோதித்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 50-க்கு மேற்பட்ட மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைக்கு உட்படவில்லை என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி பாராசிட்டமால், பான் டி, விட்டமின் சி போன்ற பொதுவான மருந்துகள், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த மருந்துகள் ஆகியவை தரமற்றவைகளாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த சோதனைகளில் பல முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக ஆல்கம் லேபரட்டரிஸ், இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ், கர்நாடகா ஆன்டிபயாடிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் தரமற்றவை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளின் உடல்நலத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றின் பயன்பாட்டில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள், ஆகஸ்ட் மாதத்தின் தரமற்ற மருந்துகளுக்கான தகவல்கள் அனுப்பவில்லை எனத் தகவலும் வெளிவந்துள்ளது. மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.