இந்தியாவில் 5 கோடி குழந்தைகளுக்குப் பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகளில்லை - யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை!
உலக அளவில் பள்ளிகளில் அடிப்படைச் சுகாதார வசதிகள் இல்லாத கோடிக்கணக்கான குழந்தைகளில் ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த முன்னேற்றம் 2015-2025" என்ற பெயரிலான கூட்டு கண்காணிப்புத் திட்ட அறிக்கையை உலக சுகாதார அமைப்பும் யுனிசெப் அமைப்பும் கூட்டாக வெளியிட்டுள்ளன.

உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கை 24.4 கோடியாகும். இதில் சுமார் 5 கோடி குழந்தைகள் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை இந்தியாவில் அதிகமுள்ளது.
இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நைஜீரியாவில் 3.4 கோடி குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 2.6 கோடி குழந்தைகளும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1.1 கோடி குழந்தைகளும், இந்தோனேசியாவில் 80 லட்சம் குழந்தைகளும் தங்களது பள்ளிகளில் உரிய சுகாதார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான சர்வதேச அளவிலான முன்னேற்றங்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
