ஒரே நாளில் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு..சென்னையில் வேகமெடுக்கும் டெங்குப் பரவல் - தடுப்பு பணிகள் தீவிரம்!
சென்னையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு இருந்த பாதிப்பு, கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,290 ஆக உயர்ந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 18,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவாகும் டெங்கு வழக்குகளில் 90 முதல் 95 சதவீதம் வரை சாதாரணக் காய்ச்சலாகவே உள்ளன. நோயாளிகள் வீடுகளிலேயே ஓய்வெடுத்து மருத்துவர் ஆலோசனையுடன் குணமடைகின்றனர். மீதமுள்ள 5 முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சைக் காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
சளி மற்றும் இருமல் இல்லாமல் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால் அது டெங்குவின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தனது 15 மண்டலங்களிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: 3,500-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூவம் மற்றும் அடையாறு போன்ற பெரிய நீர்நிலைகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நவீன ட்ரோன்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளிலும் காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கச் செய்யும் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வீட்டைச் சுற்றிலும் டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் இளநீர் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவத்தைத் தவிர்த்து உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
