லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் பலி - ஓட்டுநர் கைது - ராமநாதபுரத்தில் துயரம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதிய கோர விபத்தில் சுமார் 50 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிசேரி பகுதியில் சாலையோரமாகச் செம்மறி ஆடுகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அருப்புக்கோட்டையை நோக்கி மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த ஆடுகள் மீது மோதியது.
லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபட்டுக்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஏறத்தாழ ரூ.5 லட்சம் மதிப்புள்ள 50 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்தனர். மேலும், விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் அர்ஜுனன் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
