இ-ஆட்டோ, சிஎன்ஜி மாற்றத்திற்கு 50% மானியம்.. தவெக-வின் 'பசுமை மோட்டார் வாகனத் திட்டம்'!

 
இ-ஆட்டோ, சிஎன்ஜி மானியம் பசுமை மோட்டார் வாகனம் இ-ஆட்டோ, சிஎன்ஜி மானியம் பசுமை மோட்டார் வாகனம்

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தமிழக வெற்றிக் கழக அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது. தவெக அரசின் புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் 'சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' அமைச்சராக ராஜீவ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான 'பசுமை மோட்டார் வாகனத் திட்டம்' மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் பின்வரும் அதிரடி மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

சிஎன்ஜி கேஸ்

சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த புதிய மின்சார ஆட்டோக்களை வாங்கும் ஓட்டுநர்களுக்கு 50 சதவிகித மானியம் (அதிகபட்சமாக ரூ.75,000 வரை) அரசின் சார்பில் வழங்கப்படும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள தங்களின் பழைய பெட்ரோல்/டீசல் ஆட்டோக்களைச் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சிஎன்ஜி (கேஸ்) முறைக்கு மாற்றிக் கொள்ள விரும்பும் ஓட்டுநர்களுக்கு, அதற்கான செலவில் 50 சதவிகித மானியம் (அதிகபட்சமாக ரூ.30,000 வரை) வழங்கப்படும்.

மின்சார ஆட்டோ கேஸ்

புதிய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜீவ், இத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்த முக்கிய மானியத் திட்டங்கள் மற்றும் பசுமைத் தமிழகத்திற்கான புதிய அறிவிப்புகளை இன்னும் சில நாட்களில் முறைப்படி வெளியிட உள்ளார் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் தமிழக ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.