தவெக நிர்வாகி வீட்டில் 'விசில்' சின்னம் பொறித்த 5,000 தட்டுகள் பறிமுதல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருச்செந்தூர் அருகே தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கில் விசில் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி விவாதப்பொருளாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி பகுதியில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாகப் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உடன்குடியில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரின் வீட்டில் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4,971 சில்வர் தட்டுகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்தத் தட்டுகள் ஒவ்வொன்றிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான 'விசில்' சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் ₹1 லட்சம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி, வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்தப் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தற்காலிகமாக மாற்றியுள்ளனர். இது தொடர்பாக அந்தத் தவெக நிர்வாகியிடம் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தொண்டர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வரும் நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் இவ்வளவு பெரிய அளவில் பொருட்கள் சிக்கியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
