உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ... அட்டவணை விரைவில் வெளியீடு!
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்த அறிவிப்பு வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பவே நாடுகளுடன் இணைந்து நம்மீபியாவும் இத்தொடரை நடத்தவுள்ளது.

இத்தொடருக்காகத் தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்கள், ஜிம்பாப்பவேயில் 3 மைதானங்கள் மற்றும் நமீபியாவில் 1 மைதானம் என மொத்தம் 12 மைதானங்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை இத்தொடர் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் மீண்டும் ஆப்பிரிக்க மண்ணிற்குத் திரும்புவதால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
