தமிழகத்தில் இன்று முதல் 52 முக்கிய கோவில்களில் செல்போன் தடை - பாதுகாப்பு பெட்டகங்கள் அமைப்பு!

 
செல்போன் தடை

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மையும் ஆன்மிகச் சூழலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், முதல் கட்டமாக 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில்களுக்குள் செல்பவர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுப்பதுடன், ரீல்ஸ் போன்ற காணொளிகளைத் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடித் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

செல்போன்

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும் திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், ராமேசுவரம் உள்ளிட்ட முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 பெரிய கோவில்களில் இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், திருவிழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், பக்தர்கள் தங்களது செல்போன்களை வீடுகளிலோ அல்லது வாகனங்களிலோ வைத்துவிட்டு வருவது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

கோவில்களுக்குள் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், அதற்குப் பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.