52 ஆண்டுகால விசுவாசம் முறிந்தது... தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் மீசை ராஜேந்திரன்!

 
மீசை ராஜேந்திரன் மீசை ராஜேந்திரன்

தேமுதிக-வின் முக்கிய முகமாகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த மீசை ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மீசை ராஜேந்திரன் தேமுதிக தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனது நீண்டகாலப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் மன்றத்தில் 31 ஆண்டுகளும், கட்சி தொடங்கிய பிறகு 21 ஆண்டுகளும் என மொத்தம் 52 ஆண்டுகள் கேப்டனுக்காகவும், இயக்கத்திற்காகவும் உழைத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீசை ராஜேந்திரன்

"கட்சிக்காக என் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையெல்லாம் கேப்டன் என்கிற ஒற்றைச் சொல்லுக்காக ஏற்றுக் கொண்டேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது கட்சியில் விசுவாசத்திற்கு இடமில்லை என்பதால் கனத்த இதயத்துடன் வெளியேறுவதாகத் தெரிவித்திருந்தார்.

தேமுதிக-விலிருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்ற மீசை ராஜேந்திரன், அவருக்குப் பொன்னாடை போர்த்தி அதிமுக-வில் இணைந்தார். இவரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

பிரேமலதா

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் மூத்த நிர்வாகியும், ஊடகங்களில் தேமுதிக-வின் குரலாக ஒலித்தவருமான மீசை ராஜேந்திரன் விலகியது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-வில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.