ஜூன் 23ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் - தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பின் நடப்பதால் பெரும் எதிர்பார்ப்பு!

 
காவிரி

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மோதல் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், வரும் ஜூன் 23 அன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது அமர்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

காவிரி

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். மத்திய அரசிடமும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் இதற்கான அனுமதியைக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜூன் 23 அன்று நடைபெறும் இந்த 52-வது ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கான அனுமதியைக் கோரும் விவகாரத்தைக் கர்நாடகா முக்கியப் பொருளாக முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காவிரி ஆறு வைகை தாமிரபரணி

கர்நாடகாவின் இந்த முயற்சிக்குத் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தர வேண்டிய உரியத் தண்ணீரைத் தடையின்றித் திறக்க வேண்டும் என்றும், கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் வலுவாக வாதிட உள்ளனர்.

இன்று தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான கண்டனத் தீர்மானத்தின் நகலையும், தமிழகத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் ஆணையத்தின் தலைவர் எல்.ஏ.வி.பிரசாத்திடம் தமிழகக் காவிரி தொழில்நுட்பக் குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரைப் பெறுவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.