55 வயதில் பாடிபில்டிங் சாதனை! 105 கிலோவில் இருந்து 40 கிலோ எடை குறைத்த ஜிம் பயிற்சியாளர்
வயது என்பது சாதனைகளுக்குத் தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த 55 வயது ஜிம் பயிற்சியாளர் சாஹேபாலால் சப்பார்பந்த். ஒரு காலத்தில் 105 கிலோ எடையுடன் இருந்த இவர், உடல் எடையைக் குறைக்கத் தொடங்கி, பின்னர் பாடிபில்டிங் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.கர்நாடகாவின் நிடகுந்தி பகுதியைச் சேர்ந்த சாஹேபாலாலுக்கு ஆரம்பத்தில் ஜிம் பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதே அவரது முதல் நோக்கமாக இருந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடல் பருமன் குறித்து கேலி செய்ததால், உடற்பயிற்சி மூலம் தனது உடலை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதற்காக உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து, தீவிரமான பயிற்சியையும் கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றினார். எண்ணெய் மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளைத் தவிர்த்து, உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இதன் விளைவாக, ஏழு மாதங்களில் சுமார் 40 கிலோ எடையைக் குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
48 வயதில் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியைத் தொடங்கிய அவர், பின்னர் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். முதல் போட்டியில் பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், போட்டியில் பங்கேற்றதற்காகப் பலரும் பாராட்டியது அவருக்கு ஊக்கமளித்தது.
தொடர்ந்து மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்ற சாஹேபாலால், நான்கு முறை முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பல போட்டிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பெற்றுள்ளார். தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற தேசிய பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2023-ல் மத்தியப் பிரதேசத்தின் ரத்லாமில் நடைபெற்ற மிஸ்டர் இந்தியா போட்டியிலும் மாஸ்டர்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 58-வது ஆசிய பாடிபில்டிங் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில், 50 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கான 80 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றார்.தற்போது அவர் தினமும் காலையில் சுமார் மூன்று மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எளிய நோக்கத்தில் தொடங்கிய பயணம், தேசிய அளவிலான பதக்கங்களையும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. 55 வயதிலும் தனது முயற்சியைத் தொடர்ந்து வரும் சாஹேபாலாலின் பயணம் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
