பலத்த பாதுகாப்புடன் நாளை தொடங்குகிறது 57 நாட்கால அமர்நாத் யாத்திரை!

 
அமர்நாத் யாத்திரை

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மற்றும் காந்தர்பால் மாவட்டங்களில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில், இயற்கை முறையில் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிப்பதற்கான 57 நாட்காலப் புனித யாத்திரை, மிக பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் நாளை தொடங்குகிறது.

முன்னோட்டமாக, ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸ் அடிப்படை முகாமில் இருந்து புனிதப் பயணத்தைத் தொடங்கும் பக்தர்களின் முதல் குழுவிற்கான பிரத்யேகப் பயணத்தை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று காலை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

அமர்நாத் பனி லிங்கம்

இந்த முதல் குழுவில் 4,822 பக்தர்கள் அடங்கிய உறைவிடம் சார்ந்த அணி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரின் கவச வாகனங்கள் புடைசூழ 259 வாகனங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இரு முக்கிய அடிப்படை முகாம்களை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

வழக்கம்போலப் பாரம்பரியமிக்க 48 கிலோமீட்டர் தூரம் கொண்ட பகல்காம் வழித்தடம் மற்றும் செங்குத்தான 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பல்தால் வழித்தடம் ஆகிய இரு வழிகள் மூலமாகப் பக்தர்கள் நாளை முதல் தங்களது மலையேற்றப் பயணத்தைத் தொடங்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி திருநாளுடன் நிறைவடைகிறது.

காஷ்மீர் எல்லையில் நிலவி வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அமர்நாத் யாத்திரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மிக பிரம்மாண்டமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் மத்திய ஆயுதப் போலீஸ் படைகளின்  670-க்கும் மேற்பட்ட கம்பெனிப் படைகள் யாத்திரை செல்லும் வழிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில்  முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளன.

அமர்நாத்

வான்வழி மற்றும் தரைவழித் துல்லியக் கண்காணிப்பிற்காக அனந்தநாக் காவல் துறை சார்பில் பிரத்யேகமாக 'புரொஜெக்ட் ஹாக் ஐ' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிநவீன ட்ரோன்கள், 416 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 6 முக்கிய இடங்களில் 34 முக அடையாளங்களைக் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யாத்திரையில் பங்கேற்கும் அனைத்துப் பக்தர்களுக்கும் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ரேடியோ அலைவரிசை அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பக்தரின் நடமாட்டத்தையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

நெடுஞ்சாலைகளில் பக்தர்கள் பயணிக்கும் முன்பாகப் பாதைகளைச் சோதிக்கும் 'ரோடு ஓப்பனிங் பார்ட்டி' (ROP) மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி, முழுப் பாதுகாப்புடன் தங்களது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு முகமைகள் கேட்டுக் கொண்டுள்ளன.