குட்டையில் குளிக்கச் சென்ற 6 சிறுமிகள் நீரில் மூழ்கிப் பலி... பீகாரில் பெரும் சோகம்!
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், தண்ணீர் நிரம்பிய குட்டையில் குளிக்கச் சென்ற 6 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் மோதிஹாரி அருகே உள்ள ரக்வா பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை, ஒரு குழுவாகச் சிறுவர் மற்றும் சிறுமியர் அங்குள்ள தண்ணீர் நிரம்பிய ஆழமான குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற மற்ற ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் பிடிக்க முயன்று, பலத்த நீரோட்டம் மற்றும் ஆழம் காரணமாக அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர்.

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 6 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். தீட்சா குமாரி (12), சோனாக்சி குமாரி (9), பிரியா குமாரி (7), ஆராதயா குமாரி (11), சோட்டி குமாரி (8), பிரின்ஸ் குமார் (11) என ஐந்து பேர் சிறுமிகள், ஒருவர் சிறுவன் என 6 பேர் உயிரிழந்தனர். இதில் தீட்சா, சோனாக்சி மற்றும் பிரியா ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என்பது அந்த கிராமத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பீகார் அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சௌரப் ஜோர்வால் அறிவித்துள்ளார்.

நீர்நிலைகளுக்கு அருகே குழந்தைகளைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்றும், பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பீகாரில் பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜிதியா பண்டிகையின் போது கூட மாநிலம் முழுவதும் பல குழந்தைகள் நீரில் மூழ்கிப் பலியானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கக் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
