வேன் மீது லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி, 20 பேர் படுகாயம்!
உத்தரப் பிரதேசத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம் ரெவை கிராமத்தைச் சேர்ந்த 26 பேர் கொண்ட குழுவினர், வேனில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உ.பி.யின் கஸ்கஞ்ஜ் மாவட்டம் மோகன்புரா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
