பாஜக பிரமுகரை கொன்ற 6 பேருக்கு தூக்கு தண்டனை!

 
பாஜக பாஜக

 

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவர் கடந்த 2025-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான பாஜக இளைஞர் அணி தலைவர் வெங்கடேஷ், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கொலையாளிகள், சாட்சி சொல்வதைத் தடுக்க வெங்கடேசைத் தீர்த்துக்கட்ட ரகசியமாகச் சதித்திட்டம் தீட்டினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி வெங்கடேஷ் தனது இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்றபோது, மர்ம கும்பல் காரால் அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, மறைந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சித் தகவல் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி ரவி, மைலாரி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தது.

இந்தக் கொலை வழக்கு கொப்பல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சதானந்தநாயக் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கினார். அதில் வெங்கடேசைத் திட்டமிட்டுக் கொலை செய்த ரவி, மைலாரி, தன்ராஜ், பீமா, சலீம் மற்றும் கங்காதர் ஆகிய 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.