விஜய் ரோடு ஷோவில் பெண்ணிடம் 6 சவரன் நகை பறிப்பு - தி.நகரில் பரபரப்பு!

 
தவெக நகை தவெக நகை

சென்னை தி.நகரில் இன்று மாலை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையின் போது, மர்ம நபர்கள் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தி.நகர் வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து இன்று மாலை முத்துரங்கன் சாலை பகுதியில் ரோடு ஷோ நடத்தினார். விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தச் சாலையில் முண்டியடித்தனர்.

விஜய்

இந்த அதீத கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள், அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாகப் பறித்துக் கொண்டு தப்பினர். ரோடு ஷோ முடிந்த பிறகு தனது நகை காணாமல் போனதை உணர்ந்த அந்தப் பெண், அதிர்ச்சியடைந்து அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்டார்.

நேற்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டம் கணியூர் பகுதியில் விஜய் ரோடு ஷோ சென்றபோதும், இதேபோல் கூட்ட நெரிசலில் ஒரு பெண்ணிடம் 5 சவரன் நகை பறிபோனது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நாட்களில் விஜய்யின் பரப்புரையில் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

இந்தச் சம்பவம் குறித்துத் தி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பழைய குற்றவாளிகள் யாரேனும் இந்தக் கூட்டத்தில் ஊடுருவினார்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் ரோடு ஷோக்களில் பொதுமக்கள் அதிக நகை அணிந்து வருவதைத் தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.