பாகிஸ்தான் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பலி!
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சைபுல்லா ஏரியில் , சுற்றுலாப் பயணிகள் பயணித்த விசைப்படகு ஒன்று எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாண அவசரக்கால மீட்பு முகமைவெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, கோடை விடுமுறையைக் கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அலைமோதிய வேளையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் ஏற்றப்பட்டதே படகு நிலைதடுமாறி கவிழக் காரணம் எனத் தெரிகிறது. ஏரியின் நடுவே சென்றபோது படகு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்ளூர் நீர்மூழ்கி வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், ஏரி நீரின் கடுமையான குளிர்ச்சி மற்றும் ஆழம் காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விபத்தின் போது நீரில் மூழ்கிப் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, இன்னும் கண்டறியப்படாத மேலும் 3 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் பலியானவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் பஞ்சாப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடி, விபத்துக்கான உண்மைப் பின்னணி குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாகாணத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் சுற்றுலாத் தளங்களில் முறையான பாதுகாப்பு அங்கீகாரம் இல்லாத படகுகளை இயக்க உடனடியாகத் தடை விதித்தும் அவர் உத்தர பிறப்பித்துள்ளார்.
