4.27 வினாடிகளில் Rubik’s Cube! 6 வயது சீன சிறுமி படைத்த உலக சாதனை!

 
ரூபிக்ஸ்

 

ரூபிக் கியூபை சில நொடிகளில் தீர்ப்பதே சவாலான நிலையில், சீனாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி சராசரியாக 4.27 விநாடிகளில் 3x3 ரூபிக் கியூபை தீர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.சீனாவின் சிச்சுவான் மாகாணம் செங்டுவைச் சேர்ந்த லியான் யுன்ஷி என்ற சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளார். ‘ஜிஜி’ என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் இவர், உலக கியூப் சங்கம் (WCA) அங்கீகரித்த போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

செப்டம்பர் 12-ம் தேதி வுஹானில் நடைபெற்ற WCA போட்டியில், 3x3 ரூபிக் கியூபை 5 முறை தீர்த்ததன் சராசரி நேரமாக 4.52 விநாடிகளை பதிவு செய்து பெண்கள் பிரிவில் உலக சாதனையை முதன்முறையாக முறியடித்தார்.

அதன்பிறகு செப்டம்பர் 14-ம் தேதி குவாங்சோவில் நடைபெற்ற மற்றொரு WCA போட்டியில், தனது முந்தைய சாதனையையும் முறியடித்து 4.27 விநாடிகள் என்ற சராசரி நேரத்தை பதிவு செய்தார். இதன் மூலம் 4.5 விநாடிகளுக்கு குறைவான சராசரி நேரத்தை பதிவு செய்த முதல் பெண் Speedcuber என்ற சாதனையையும் அவர் பெற்றுள்ளார்.

6-year-old Chinese girl sets new world record in solving Rubik's Cube - YouTube

லியான் யுன்ஷி 4 வயதில் ரூபிக் கியூப் கற்கத் தொடங்கியதாகவும், ஆரம்பத்தில் ஒரு கியூபை தீர்க்க சுமார் 90 விநாடிகள் எடுத்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். தற்போது 1,300-க்கும் மேற்பட்ட ரூபிக் கியூப் தீர்வு முறைகளை அவர் கற்றுள்ளதாகவும், கடந்த ஓராண்டாக தினமும் 2 முதல் 3 மணி நேரம் பயிற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

6 வயதிலேயே ரூபிக் கியூப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள லியான் யுன்ஷியின் வேகம் மற்றும் திறமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.