ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்குக் கட்டணம் - ஈரானுக்கு 60 நாடுகள் எதிர்ப்பு!

 
ஹார்முஸ் கப்பல்

ஈரான் மற்றும் ஓமன் இடையே சர்வதேச வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க ஈரானிய அரசு திட்டமிட்டுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்குச் சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சர்வதேச கடல் வழித்தடங்களில் இதுபோன்று சட்டவிரோதமான முறையில் கட்டணங்கள் விதிப்பது, பாரபட்சமான கட்டுப்பாடுகளை உருவாக்குவது மற்றும் கப்பல்கள் செல்வதற்கு முன் அனுமதி பெறும் நிபந்தனைகளைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரத்யேகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தியா கப்பல் ஹார்முஸ் எண்ணெய் ஏற்றுமதி

சர்வதேச கடல் சட்டங்களுக்கு முரணான இந்த செயலை எதிர்த்து ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தப் பிரகடனத்திற்குத் தங்களது பலத்த ஆதரவைத் தெரிவித்துள்ளன.

கப்பல்

சர்வதேச கடல் வழிப் பாதைகளை வணிக ஆதாயத்திற்கோ அல்லது அரசியல் அழுத்தத்திற்கோ பயன்படுத்தக் கூடாது என்றும், அனைத்து நாடுகளின் கப்பல்களும் தடையின்றி சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஈரானின் இந்த ஒருபக்கக் கட்டண விதிப்புத் திட்டம் உலகளாவிய வர்த்தக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.