61 வயதில் 5 மணி நேரம் பிளாங்க்! 12 பேரக்குழந்தைகளின் பாட்டி படைத்த பிரமிப்பு சாதனை
வயது என்பது சாதனைகளுக்குத் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த 61 வயது பெண் ஒருவர் தொடர்ந்து 5 மணி நேரம் பிளாங்க் நிலையில் இருந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த டோனாஜீன் வைல்டு என்ற முன்னாள் பள்ளி ஆசிரியர், அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் நடைபெற்ற ஹன்ட்ஸ்மேன் வேர்ல்டு சீனியர் கேம்ஸ் நிகழ்ச்சியில் இந்தச் சாதனை முயற்சியை மேற்கொண்டார். அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற இந்த முயற்சியில் அவர் 5 மணி நேரம் பிளாங்க் நிலையில் இருந்தார்.
பிளாங்க் என்பது உடலை நேராக வைத்துக்கொண்டு, முழங்கைகள் மற்றும் கால்விரல்களின் ஆதரவுடன் உடலைத் தரையிலிருந்து உயர்த்தி வைத்திருக்கும் உடற்பயிற்சியாகும். சில நிமிடங்கள் இந்த நிலையில் இருப்பதே பலருக்குச் சவாலாக இருக்கும் நிலையில், டோனாஜீன் வைல்டு தொடர்ந்து 5 மணி நேரம் இந்த நிலையில் இருந்துள்ளார்.
இவருக்கு 5 குழந்தைகளும் 12 பேரக்குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு, பெண்கள் பிரிவில் நீண்ட நேரம் பிளாங்க் நிலையில் இருந்ததற்கான கின்னஸ் உலக சாதனையை அவர் படைத்திருந்தார். அப்போது 4 மணி நேரம், 30 நிமிடம், 11 விநாடிகள் பிளாங்க் நிலையில் இருந்து சாதனை படைத்தார்.
தற்போதைய முயற்சியில் தனது முந்தைய சாதனையைத் தாண்டி 5 மணி நேரத்தை எட்டியுள்ளார். இருப்பினும், புதிய சாதனைக்கான ஆதாரங்களைப் பரிசீலித்த பிறகே கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கும்.
டோனாஜீன் வைல்டு பிளாங்க் உடற்பயிற்சியைத் தொடங்கியதும் சுவாரசியமானது. கடந்த 2013-ம் ஆண்டு கையில் ஏற்பட்ட காயத்தால் வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாத நிலையில், பிளாங்க் பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். நாளடைவில் அதில் தனது திறனை வளர்த்துக்கொண்டு உலக சாதனை முயற்சியில் இறங்கியுள்ளார்.
மேலும், ஒரு மணி நேரத்தில் அதிக புஷ்-அப் செய்த பெண்களுக்கான சாதனையையும் அவர் ஏற்கெனவே படைத்துள்ளார். 2024-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்-அப் செய்து சாதனை படைத்திருந்தார்.
61 வயதிலும் தொடர்ந்து பயிற்சி செய்து புதிய இலக்குகளை நோக்கி முன்னேறும் டோனாஜீன் வைல்டின் முயற்சி, வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
