63 அடி உயர பிரமாண்ட களிமண் விநாயகர்! சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மங்கினபுடி கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள 63 அடி உயர பிரம்மாண்ட களிமண் விநாயகர் சிலை சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மங்கினபுடி கடற்கரையில் ‘சாகர தீர மகா கணபதி’ வழிபாட்டின் ஒரு பகுதியாக இந்த பிரம்
மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க களிமண்ணால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த விநாயகர் சிலையை உருவாக்குவதற்காக கிருஷ்ணா மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் இருந்து களிமண் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயனப் பொருட்கள் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
63 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட களிமண் விநாயகர் சிலை, ‘International Achievers Book of Records’ என்ற சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கடற்கரைக்கு அருகில் இவ்வளவு பெரிய களிமண் விநாயகர் சிலை அமைக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 63 அடி உயர விநாயகரின் கையில் 630 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கியுள்ள இந்த கடற்கரைத் திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது.சாதனைக்கான சான்றிதழ் விழா ஏற்பாட்டாளர்களிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரமாண்ட விநாயகர் சிலையை காண தினமும் ஏராளமான பக்தர்கள் மங்கினபுடி கடற்கரையில் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
