கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி... சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்!

 
விஜய் கொடைக்கானல் விஜய் கொடைக்கானல்

தமிழகத்தின் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், கோடை விடுமுறையை முன்னிட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.

குளுமையான தட்பவெப்ப நிலையை அனுபவிக்கப் பயணிகள் ஆர்வம் காட்டி வருவதால், நகரின் முக்கிய இடங்களான ஏரிச்சாலை, பையன்ட் பூங்கா மற்றும் தூண் பாறை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கொடைக்கானலில் விரைவில் தொடங்க உள்ள 63-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு, வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானல் மலர் கண்காட்சி

இதற்காகப் பூங்காக்களில் விதவிதமான மலர்ச் செடிகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்க உள்ள நிலையில், இதைக் காண இப்போதே சுற்றுலாப் பயணிகள் திட்டமிட்டு வருவதால் விடுதிகள் மற்றும் தங்கும் இல்லங்கள் அனைத்தும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் இந்தத் தொடர் வருகையால் கொடைக்கானல் பகுதி வியாபாரிகள், வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாகக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், உள்ளூர் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

கொடைக்கானல்

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முக்கியச் சந்திப்புகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.