64 ஆண்டு காதல்... 90 வயதில் திருமணம்: "ஆண்களை நம்ப முடியாது" - பாட்டியின் வைரல் பதில்!

 
வயதான தம்பதி திருமணம்

காதலுக்கு வயதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தும் வகையில், 64 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தங்களது 95 வயது காதலரை, 90 வயதில் கரம் பிடித்துள்ளார் ஒரு பாட்டி. இவர்களது நெகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

இத்தனை ஆண்டுகள் கழித்துத் திருமணம் செய்துகொண்டது குறித்துப் பாட்டி அளித்த நகைச்சுவையான விடை தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட காலம் காதலித்தும் ஏன் இவ்வளவு தாமதமாகத் திருமணம் செய்துகொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த 90 வயது பாட்டி, "உண்மையான அன்பை உறுதி செய்யவே தாமதம்": "ஆண்கள் அடிக்கடி தங்களது மனதை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள். அதனால் அவர் உண்மையிலேயே என்னுடன் தான் தன் வாழ்நாளைக் கழிக்க விரும்புகிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே எனக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன" எனச் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.

95 வயதான காதலன் கடந்த 64 ஆண்டுகளாகத் தன் மீது காட்டிய அதே தூய்மையான அன்பும் அக்கறையும் மாறாமல் இருந்ததைக் கண்ட பிறகே, அவரோடு முறைப்படி கரம்பிடிக்கச் சம்மதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் மற்றும் பேரக் குழந்தைகள் முன்னிலையில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி முடித்த இவர்களது திருமண நிகழ்வு, காதல் மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"பொறுமைக்கும் காதலுக்கும் சரியான உதாரணம் இந்த ஜோடி தான்" எனப் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.