ஏப்.6ல் வெளியாகிறது புதிய வாக்காளர் பட்டியல் - 6.48 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, இறுதி செய்யப்பட்ட ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. பெயர் சேர்ப்புக்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 6,48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், பெண்கள்: 3,58,500 (அதிகபட்சமாகப் பெண்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்). ஆண்கள்: 2,89,581. மூன்றாம் பாலினத்தவர்: 204.

பிப்ரவரி 23, 2026-ல் வெளியான இறுதிப் பட்டியலுடன், மார்ச் 26 வரை பெறப்பட்ட புதிய சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு ஒரே பட்டியலாக இது தயாரிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த பட்டியல் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். தனித்தனியாகச் சேர்க்கை, நீக்கப் பட்டியல்கள் வழங்கப்படாது.

மார்ச் 26 வரை விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள். இவர்கள் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். தமிழகத்தில் ஏற்கனவே 5.67 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இந்தப் புதிய சேர்க்கைக்குப் பிறகு வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
