6,647 சிறப்பு மையங்கள்... வர்ற ஞாயிற்றுக்கிழமை நவ.22ம் தேதி 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நவம்பர் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இந்தச் சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்த ஆறு மாவட்டங்களிலும் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து விடுபடாமல் சென்றடையும் வகையில், மொத்தம் 6,647 மையங்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் செயல்படும். மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழக்கமான தடுப்பூசி அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருந்தாலும், இந்த ஆறு மாவட்டங்களில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் மீண்டும் ஒருமுறை போலியோ சொட்டு மருந்தைத் தவறாமல் புகட்டுமாறு பெற்றோர்களைத் தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இம்முகாம் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
