தமிழகத்தில் இடமாறுதல் கேட்டு 67,390 ஆசிரியர்கள் விண்ணப்பம்.. இம்மாத இறுதி வரை கலந்தாய்வு நடைபெறும்!

 
ஆசிரியர் ஆசிரியை பேராசிரியர்

தமிழகத்தில் 67,390 ஆசிரியர்கள் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2026-2027 ஆம் கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு , கல்வித் தகவல் மேலாண்மை முகமை இணையதளம் வழியாக கடந்த ஜூலை 1 முதல் தொடங்கிய நிலையில், கலந்தாய்வு இம்மாத இறுதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றிற்கான விண்ணப்ப அவகாசம் கடந்த மாதம் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த சூழலில், இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து பெருமளவிலான விண்ணப்பங்கள்  குவிந்துள்ளன. இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரத்து 372 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4 ஆயிரத்து 447 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 1,003 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்களது இடமாறுதலுக்காகப் பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  உத்தரவு!! தமிழக அரசு அதிரடி!!

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 7 ஆயிரத்து 249 பட்டதாரி ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக இந்தத் துறையில் மட்டும் 34,071 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  அதே போன்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பல்வேறு பதவிகளுக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 426 பட்டதாரி ஆசிரியர்களும், 10 ஆயிரத்து 475 முதுநிலை ஆசிரியர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

537 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 978 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரியுள்ளனர். 1,269 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 981 கணினி ஆசிரியர்கள் எனப் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் மொத்தம் 33,319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாகத் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்த்துத் தமிழகம் முழுவதும் 67,390 ஆசிரியர்கள் இந்த ஆண்டு பொது இடமாறுதல் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர்கள் கூட்டம்

முதற்கட்டக் கலந்தாய்வில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பிறப் பதவிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அடுத்தடுத்த தேதிகளில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.