"இந்தியாவில் விரைவில் 6ஜி தொழில்நுட்பம்!" - மெல்போர்னில் 'வணக்கம்' கூறி பிரதமர் மோடி அதிரடி!
அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மெல்போர்ன் நகரில் உள்ள புகழ்பெற்ற மார்வெல் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இந்திய வம்சாவளியினர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். "வணக்கம் மெல்போர்ன்!" எனத் தூய தமிழில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியாவில் மிக விரைவில் அதிநவீன '6ஜி' இணையச் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தோனேஷியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு மெல்போர்ன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் இணைந்து மார்வெல் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களிடையே அவர் உரையாற்றினார்:
"வணக்கம் மெல்போர்ன்! இங்குள்ள வீடுகளில் இருக்கும் பால் ஆஸ்திரேலியப் பாலாக இருக்கலாம், ஆனால் அதில் போடப்படும் டீ இந்தியத் தேநீர். பருப்பும் காய்கறிகளும் ஆஸ்திரேலியாவினுடையதாக இருக்கலாம், ஆனால் அவை அசல் இந்திய மசாலாப் பொருட்களால் தாளிக்கப்படுகின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உறவு மிகவும் உணர்ச்சி பூர்வமானது" எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

"இந்தியா உலக நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்டும்போது, மக்களின் பாஸ்போர்ட்களைப் பார்ப்பதில்லை; உதவிப் பொருட்களை அனுப்பும்போது பாஸ்போர்ட்டின் நிறத்தையும் பார்ப்பதில்லை. அதனால்தான் உலகம் இந்தியாவின் மீது இவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் நான் 3-வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளேன்" என்றார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் பிரதமர் மோடி நடத்திய உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தையில், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
விண்வெளி வான்வெளி ஒத்துழைப்பு: இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ககன்யான்'விண்வெளித் திட்டத்தில் இணைவதாகப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கண்காணிப்பு வசதிக்காக, கோகோஸ்தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையில் இந்தியாவின் அசுர வளர்ச்சி குறித்துப் பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும் இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 6ஜி தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவில் வரப்போகிறது. ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வரும் வேளையில், தற்பொழுது ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலேயே தங்களது வளாகங்களைத் திறந்து வருகின்றன. டீக்கின் மற்றும் வொல்லோங்காங் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே இந்தியாவில் வளாகங்களைத் தொடங்கிவிட்டன" எனக் குறிப்பிட்டார்.
உரையின் நிறைவாக, இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை போற்றும் விதமாகவும், ஆஸ்திரேலியப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மைதானத்தில் இருந்த அனைவரையும் தங்களது செல்போன் டார்ச் விளக்குகளை ஒளிர விடுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். மைதானமே ஒளிரும் விளக்குகளால் நிறைந்ததைக் கண்டு ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நெகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டார். சர்வதேசத் தலைவர்களின் இந்த பிரம்மாண்ட மாநாட்டையொட்டி மார்வெல் மைதானத்தைச் சுற்றிலும் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியப் பிராந்திய போலீசார் மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
