புதுக்கோட்டையில் 6 மாத கர்ப்பிணி கொலை.. கணவனுக்கு தெரியாமல் உறவினர்களே கொன்றது அம்பலம் - 6 பேர் கைது!

 
கர்ப்பிணி சந்தியா புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவத்தில், ஆறு மாதக் கர்ப்பிணியான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட மொத்தம் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குடும்பத்திற்குள் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு புகாரும், அதனைத் தொடர்ந்து அரங்கேறிய பழிவாங்கும் நடவடிக்கையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை பகுதியில் வசித்து வந்த பாண்டிதுரை என்பவரின் மனைவி சந்தியா (21). இவர் தற்போது 6 மாதக் கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகள் காரணமாகச் சந்தியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சந்தியா தனது கணவர் பாண்டிதுரையிடம், அவரது சகோதரி பாண்டிமீனா (33) மற்றும் மற்றொரு உறவினரான கனிமொழி (27) ஆகியோரின் தவறான உறவு மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து தெரிவித்துள்ளார். குடும்பத்தின் அந்தரங்க விவகாரம் வெளியில் வந்துவிட்டதாலும், தங்களது முறையற்ற தொடர்பைக் கண்டித்ததாலும் ஆத்திரமடைந்த பாண்டிமீனா மற்றும் கனிமொழி உள்ளிட்ட உறவினர்கள் சந்தியாவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

கணவர் பாண்டிதுரை மற்றும் மாமனார் ஆகியோருக்குத் தெரியாமல், சதி திட்டம் தீட்டிய உறவினர்கள் பெண்கள் உட்பட பலரும் சேர்ந்து கர்ப்பிணிப் பெண் சந்தியாவின் கழுத்தை நெரித்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கர்ப்பிணிப் பெண் சந்தியா மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பிரசவம் கர்ப்பிணி

போலீசாரின் விசாரணையில், கொலைக்கான முழுமையான காரணங்களும், இதில் சம்மந்தப்பட்ட நபர்களின் விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, சந்தியாவின் கணவர் தரப்பு உறவினர்களான பாண்டிமீனா, கனிமொழி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் குடும்பத் தகராறில் இளம் பெண்ணைப் படுகொலை செய்துள்ள இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.