பரதநாட்டியத்தில் புதிய உலக சாதனை படைத்த 6 வயது ஈழத்துச் சிறுமி!
இலங்கையின் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், பரதநாட்டியக் கலையில் மிகக் கடினமான உலக சாதனை ஒன்றைப் புரிந்து ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கையின் பிரபல ஈழத்துக் கவிஞர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயது சிறுமிக்கே இந்த சாதனை மகுடம் கிட்டியுள்ளது. நாட்டியக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இந்தச் சிறுமி, பரதநாட்டியத்தின் பல்வேறு முத்திரைகள் மற்றும் அடவுகளை உள்ளடக்கிய நடனப் பிரதிகளை எவ்வித இடைவெளியுமின்றி, தொடர்ச்சியாக இரண்டரை மணி நேரம் மேடையில் ஆடி அசாத்திய சாதனை படைத்துள்ளார்.
சிறுமியின் இந்த உடல்திறன் மற்றும் கலைத்திறனை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்வில், 'ராபா உலக சாதனை புத்தக' நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் அதிகாரப்பூர்வ நடுவர்களாகப் பங்கேற்றுச் சாதனையை நேரில் மதிப்பீடு செய்தனர்.
சிறுமியின் இந்த நீண்ட நேர நாட்டியச் சாதனை, 'ராபா உலக சாதனை புத்தகத்தில்' முறைப்படி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி, இவ்வளவு சிறிய வயதில் பரதநாட்டியக் கலையில் சாதனை புரிந்த ரஜீவன் கம்சத்வனியின் திறமையைப் பாராட்டி, அவருக்கு “உலக நாட்டிய இளவரசி" என்ற மிக உயரிய கலை மகுடத்தைச் சூட்டி சான்றிதழ்களுடன் நடுவர் குழுவினர் கௌரவித்துள்ளனர். 6 வயது ஈழத்துச் சிறுமியின் இந்த உலக சாதனைக்குத் தமிழகக் கலை உலகினரும் தங்களது வாழ்த்துகளை இணைய வழியில் தெரிவித்து வருகின்றனர்.
